தலைப்புச் செய்திகள்

லெபனாலில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியலிருந்து வெளியேறப் போவதில்லை என இஸ்ரேல் அறிவிப்பு

தெற்கு லெபனானுடன் சேர்த்து, சிரியா மற்றும் காஸாவின் சில பகுதிகளை இஸ்ரேலியப் படைகள் காலவரையின்றி தொடர்ந்து ஆக்கிரமித்திருக்கும் என்று, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

“ஜிஹாதிய பிரிவினருக்கு எதிராக எல்லையையும், அங்கிருந்து இஸ்ரேலிய சமூகங்களையும் பாதுகாப்பதற்காக, லெபனான், சிரியா மற்றும் காஸாவிலுள்ள பாதுகாப்பு வலயங்களில் ராணுவம் காலவரையின்றி தங்கியிருக்கும் என்ற தெளிவான கொள்கையை – பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் நானும் பின்பற்றி வருகிறோம்” என்று காட்ஸ் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

“ஒக்டோபர் 07ஆம் திகதிய நிகழ்வுகளிலிருந்து – நாம் கற்றுக்கொள்ளும் முக்கிய பாடம் இதுதான். தற்போதுள்ள மற்றும் வரவிருக்கும் அனைத்து அழுத்தங்கள் இருந்தபோதிலும், லெபனானிலிருந்து ராணுவம் வெளியேறுவதை நாங்கள் எதிர்க்கிறோம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

2023-ல் ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகு, காஸா, லெபனான் மற்றும் சிரியாவில் நூற்றுக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியது. இந்த நில அபகரிப்புகள் தனது பாதுகாப்பிற்கு அவசியம் என்று அந்த நாடு கூறிவருகிறது.

அமெரிக்கா – ஈரான் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ள நிலையில், லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்றும், அங்கிருக்கும் ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய ராணுவம் வெளியேற வேண்டும் எனவும் ஈரான் நிபந்தனை முன்வைத்திருக்கிறமை குறிப்பிடத்தக்கது.