தலைப்புச் செய்திகள்

கிழக்கில் 2008இல் 05 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட தொடர் கொலையில், பிள்ளையான் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்

கிழக்கு மாகாணத்தில் 2008-ஆம் ஆண்டு ரி-56 ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தி ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட – தொடர் கொலைகள் குறித்த விசாரணைகள் தொடர்பாக, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திற்கு குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) தகவல் அளித்துள்ளது.

‘பிள்ளையான்’ என அறியப்படும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் – சந்தேக நபர்களில் ஒருவராகப் பெயரிடப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மட்டிக்களப்பு மற்றும் வவுணதீவு ஆகிய பகுதிகளுக்குள் பல இடங்களில் நிகழ்ந்த இந்தச் சம்பவங்கள் குறித்து – விரிவான விசாரணைகள் நடத்தப்பட்ட பின்னர், இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக சிஐடி கூறியுள்ளது.

கல்லடியில் உள்ள முருகன் கோவிலுக்கு அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில், 2008 ஜனவரி 9 அன்று, முன்னாள் பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் விசாரணையில் உள்ள கொலைச் சம்பவங்களில் அடங்கும் என்று பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2008 மே 22 அன்று, காத்தாங்குடி பொலிஸ் பிரிவின் பிரதான வீதியில் மேலும் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மற்றொரு சம்பவத்தில், 2008 ஓகஸ்ட் 20 அன்று, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணங்குடாவில், ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் இரவில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக மூன்று சந்தேக நபர்களை சிஐடி அடையாளம் கண்டுள்ளது. முதல் சந்தேக நபர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுவிட்டதாகவும், அவர் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும் நம்பப்படுவதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மீதமுள்ள இரண்டு சந்தேக நபர்களும், 2025 ஓகஸ்ட் 13 மற்றும் நொவம்பர் 13 ஆகிய திகதிகளில் சிஐடி பிறப்பித்த தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் ஏற்கனவே கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

அவர்கள் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

சிஐடி-யின் தகவல்படி, ஐந்து கொலைகளிலும் அடையாளம் காணப்பட்ட மூன்றாவது சந்தேக நபர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான் ஆவார். இவர் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கொலை தொடர்பான – ஒரு தனி வழக்கில் தற்போது வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, ​​பிள்ளையானை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறை அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொலைகள் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்வதாக சிஐடி குறிப்பிட்டுள்ளது.