தலைப்புச் செய்திகள்

குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் பரவி வருவதாக எச்சரிக்கை: பெற்றோரை விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

குழந்தைகளிடையே பல நோய்கள் தற்போது நாடு முழுவதும் பரவி வருவதால், பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கொழும்பு – லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் விசேட குழந்தை வைத்தியர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குப் பேட்டியளித்த அவர்; தற்போது குழந்தைகளுக்கு ஏற்பட்டு வரும் நோய்களில் டெங்கு, இன்ஃப்ளூயன்ஸா, கை, கால் மற்றும் வாய் நோய் மற்றும் வைரஸ் மூளைக்காய்ச்சல் ஆகியவை அடங்கும் என்றார்.

“இந்த நோய்கள் குறித்து அனைவரும் விழிப்புடன் இருப்பதும், குழந்தைகளைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதும் அனைவரின் பொறுப்பாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

டெங்குவை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், அது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று டொக்டர் தீபால் பெரேரா எச்சரித்தார். காய்ச்சல், தலைவலி, கண்களுக்குப் பின்னால் வலி, கடுமையான உடல் வலி, மூட்டு வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும் என்று அவர் கூறினார்.

“ஒரு குழந்தைக்கு இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், பெற்றோர்கள் உடனடியாக வைத்திய உதவியை நாட வேண்டும்“ என்றார்.

இன்ஃப்ளூயன்ஸா – பொதுவாக காய்ச்சல், இருமல், குளிர் மற்றும் உடல் வலிகளுடன் வரும் என்றும், குழந்தைகளுக்கு இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் பெற்றோர்கள் வைத்திய ஆலோசனை பெற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

நோய்த்தொற்று பரவுவதைக் குறைக்க உதவும் வகையில், நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

குழந்தைகள் குணமடையும்போது – போதுமான ஓய்வு பெறுவதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

கொக்ஸாக்கி வைரஸால் (Coxsackievirus) பற்றிகுறிப்பிடுகையில், அதன் அறிகுறிகளாகக் கைகள், பாதங்கள், முழங்கைகள் மற்றும் வாயின் உட்புறத்தில் சிவப்புப் புள்ளிகள் அல்லது வெள்ளை நிற திரவம் நிறைந்த கொப்புளங்கள் தோன்றும் என்று என்றார்.

நெருங்கிய தொடர்பு மூலம் இந்த நோய் எளிதில் பரவுவதால், பாதிக்கப்பட்ட குழந்தைகளை மூன்று முதல் நான்கு நாட்களுக்கு வீட்டிலேயே வைத்திருக்கவும், அவர்களுக்கு முறையான வைத்திய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் அவர் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தினார்.

குழந்தைகளிடையே வைரஸ் மூளைக்காய்ச்சல் (viral meningitis) பாதிப்புகளும் பதிவாகி வருவதாக அவர் தெரிவித்தார். காய்ச்சல், கடுமையான தலைவலி, வாந்தி, ஒளிக்கு உணர்திறன், உரத்த ஒலிகளால் ஏற்படும் அசௌகரியம் மற்றும் உடல் வலிகள் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.