
– பாறுக் ஷிஹான் –
பதினேழு (17) வயது இளைஞருடன் தன்பாலினச் சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகரை – கல்முனை நீதிவான் நீதிமன்று 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வர்த்தக நிலையம் ஒன்றில் நீண்ட காலமாக, குறித்த நபர் இவ்வாறு தன்பாலினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தப் பின்னணியில் 17 வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்கள் குறித்த வர்த்தக நிலையத்திற்கு சென்றுள்ளனர். இதன்போது தன்பாலின சேர்க்கைக்கு வருமாறும், அதற்காக பத்தாயிரம் ரூபாய் தருவதாக வர்த்தகர் பேரம் பேசியுள்ளார்.
பின்னர் இளைஞர்களில் ஒருவருடன் வர்த்தகர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். இதனை மற்றைய இளைஞர் – வர்த்தகரின் கைத்தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
விடயம் முடிந்ததும், பேசியபடி பத்தாயிரம் ரூபாயை வர்த்தகர் கொடுக்க மறுத்தமையினால், வர்த்தகரின் கைத்தொலைபேசியினை குறித்த இளைஞர்கள் இருவரும் அடாத்தாக எடுத்துச்சென்றுள்ளனர்.
அதுமாத்திரமின்றி, பேசியபடி 10 ஆயிரம் ரூபாய் பணத்தை தருமாறு வர்த்தகரை மிரட்டியுள்ளனர். தராவிட்டால், குறித்த சம்பவத்தின் போது எடுத்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிடப் போவதாகவும் கூறியுள்ளனர்.
ஆனாலும், வர்த்தகர் பணம் கொடுக்கவில்லை. தற்போது குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து 56 வயதுடைய திருமணமான மேற்படி வர்த்தகர் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு மே மாதம் 06 ஆந் திகதி சென்று முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டில் – தனது வர்த்தக நிலையத்துக்கு வந்த 17 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள், மேசையில் இருந்த விலையுயர்ந்த கைத்தொலைபேசியினை திருடிச் சென்றதாக தெரிவித்திருந்தார்.
வர்த்தகரின் குறித்த முறைப்பாட்டுக்கு அமைய, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இதன் போது அம்பாறை மாவட்டம் புறநகர் பகுதியில் வைத்து 17 வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்களையும் கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்து – நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
இதன்போது பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு விடயங்கள் அம்பலமாகின.
இதனையடுத்து, கடந்த 21ஆம் திகதி குறித்த வழக்கானது கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த வீடியோவை இளைஞர்கள் இருவர் சார்பாகவும் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றிற்கு சமர்ப்பித்தனர். வீடியோவை சான்றுப்பொருளாக எடுத்துக்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மேலும் கைதான இரு சிறுவர்களில் – தன்பாலின சேர்க்கைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படுபவரை – சட்ட வைத்திய அதிகாரியிடம் வைத்திய பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார். அத்துடன், பிரதான சந்தேக நபரான வர்த்தகரை கைது செய்யுமாறு கட்டளை பிறப்பித்ததுடன் குறித்த வழக்கினை நேற்றைய தினம் 25ஆம் திகதிக்கு ஒத்தி வைத்திருந்தார். இதன்போது பிரதான சந்தேக நபர் தலைமறைவாகி இருந்தார்.
இந்த நிலையில், நேற்று விசாரணைக்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம். சாஜித் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, தலைமறைவாகி இருந்த வர்த்தகர் 5 சட்டத்தரணிகளுடன் மன்றில் சரணடைந்திருந்தார்.
இதனையடுத்து சந்தேக நரை – நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைது செய்த பொலிஸார், பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரிடம் வாக்கு மூலம் பெற்ற பின்னர் – மீண்டும் மன்றிற்கு பொலிஸார் அழைத்து வந்தனர். இதன்போது வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதவான், வர்த்தகரை எதிர்வரும் யூன் மாதம் 08ம் திகதி வரை விளக்கமறியலில்வைக்குமாறு உத்தரவிட்டார்.


