தலைப்புச் செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே எங்கள் எதிர்பார்ப்பு: அமைச்சர் நளிந்த

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு தேர்தல்களை நடத்த முடியாது என்ற சொல்லப்படுவதையும் அவர் நிராகரித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சமீபத்தில் தெரிவித்த கருத்து குறித்து, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, அவர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய (26) ஊடக சந்திப்பில் அவர் இவற்றைக் கூறினார்.

தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடுகளில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், தேவையான நிதி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நளிந்த ஜெயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

இருப்பினும், தேர்தலை நடத்துவதில் உள்ள முக்கியத் தடை சட்ட விதிகள் தொடர்பானது என, அவர் விபரித்தார்.

சட்டப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நாடாளுமன்றக் குழுவொன்ற தற்போது செயல்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தேவையான சட்டக் கட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர், மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்த முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.

“இந்த அரசாங்கம் ஏற்கனவே எட்டு மாதங்களுக்குள் இரண்டு தேர்தல்களை நடத்தியுள்ளது. அரசியலமைப்பின்படி மக்களின் இறையாண்மையைப் பாதுகாத்து மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே எங்கள் எதிர்பார்ப்பு” எனவும் அவர் தெரிவித்தார்.