
– பாறுக் ஷிஹான் –
இரு வேறு இடங்களில் நீண்ட காலமாக போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த சந்தேக நபர்களை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட புறநகர் பகுதியில் நீண்ட காலமாக போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தருக்கு கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலை அடுத்து இந்த கைது மேற்கொள்ளப்பட்டது.
குறித்த தகவலுக்கமைய நேற்று (23) மாலை சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டி.எஸ். இந்திக தலைமையிலான பொலிசார் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது சாய்ந்தமருது-14 பிரிவில் வசிக்கும் சந்தேக நபர் – ஐஸ் போதைப்பொருள் 2220 மில்லி கிராம் உட்பட போதைப் பொருளை விற்று பெறப்பட்ட ஒரு தொகுதி பணத்துடன் கைதானார்.

இதே வேளை மற்றுமொரு சந்தேக நபர் மாவடி பகுதியில் வைத்து கைதானார்.
அவர் வசமிருந்து ஹெரோயின் 2300 மில்லி கிராம் உட்பட ஐஸ் போதைப் பொருள் 60 மில்லிகிராம் பக்கட் இரண்டும், விற்பனைக்கு தயாராக வைத்திருந்த நிலையில் மீட்கப்ட்டது.
அத்துடன் சந்தேக நபரிடம் இருந்து ஒரு தொகுதி பணமும் மீட்கப்பட்டது. மேற்குறித்த பணம் போதைப்பொருள் விற்பனையில் சம்பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.


