தலைப்புச் செய்திகள்

பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்: 24 பேர் பலி, 50 பேர் காயம்

பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானின் தலைநகரான குவெட்டாவில், ராணுவத்தினரை ஏற்றிச் சென்ற ரயில் மீது நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பிரிவினைவாதக் குழுவான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம், இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.

தாக்குதலில் ரயில் பாதைக்கு அருகில் இருந்த பல வீடுகளும் கட்டிடங்களும் கடுமையாக சேதமடைந்தன. மேலும் சில ரயில் பெட்டிகள் கவிழ்ந்து தீப்பிடித்தன.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், எக்ஸ் (X) தளத்தில் எழுதியுள்ள ஒரு பதிவில் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளார்.

“இத்தகைய கோழைத்தனமான பயங்கரவாதச் செயல்கள் பாகிஸ்தான் மக்களின் உறுதியைக் குலைக்க முடியாது. பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் ஒழிப்பதற்கான எங்கள் தீர்மானத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.