தலைப்புச் செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாஸ் பொலிஸ் சார்ஜன்ட் சிக்கினார்

– பாறுக் ஷிஹான் –

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்முனை ரெலிகொம் அருகில் நேற்று (20) மாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போது, குறித்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் சந்தேகத்தின் அடிப்படையில் கைதானார்.

50 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் இருந்து 10 கிராம் 130 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் பணப்பை, ஒரு தொகை பணம், கைத்தொலைபேசி என்பனவும் சந்தேக நபர் வசமிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலும் குறித்த சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றிய போது போதைப்பொருள் தொடர்பிலான குற்றச்சாட்டில் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர் தொழிலிலிருந்து விலக்கப்பட்ட போது, பொலிஸ் சார்ஜன்ட் ஆக கடமையாற்றினார் என ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த சந்தேக நபர் அண்மைக்காலமாக அப்பகுதி இளைஞர்களுக்கு போதைப்பொருட்களை ரகசியமாக விநியோகித்து வருபவர் என பொலிஸார் கூறினர்.