
இந்த ஆண்டுக்கான புதிய அரசியல் கட்சிகளின் பதிவு தொடங்கியுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
புதிய அரசியல் கட்சிகளின் பதிவுக்கான விண்ணப்பங்களை ஏற்கும் செயல்முறை நிறைவடைந்துள்ளதாகவும், தற்போது விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
விண்ணப்பங்களைப் பரிசீலித்த பின்னர், ஜூன் மாதமளவில் – அது தொடர்பான நேர்காணல்கள் தொடங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், புதிய அரசியல் கட்சிகளின் பதிவிற்கு முன்னர் மூன்று நேர்காணல்கள் நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்படுவதற்குத் தகுதியுள்ள, செயல்பாட்டில் உள்ள அரசியல் கட்சிகளிடமிருந்து பெப்ரவரி 28 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இந்த ஆண்டு பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு (2025) பெறப்பட்ட எண்ணிக்கையை விட குறைவு எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு (2025) தேர்தல் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட புதிய அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை ஐந்து (05) ஆகும். அதன்படி, ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மொத்த எண்ணிக்கை 85 ஆகும்.


