தலைப்புச் செய்திகள்

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த பிக்குவுக்கு விளக்க மறியல்

சிறுமி ஒருவரைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட பல்லேகம ஹேமரத்ன தேரர், மே 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பிலலுள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஹேமரத்ன தேரர், நேற்று இரவு (மே 8) கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரை மே 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு கோட்டை நீதவான் இன்று (மே 9) உத்தரவிட்டார்.

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஹேமரத்ன தேரரைக் கைது செய்யுமாறு – அனுராதபுர பிரதம நீதவான் உத்தரவிட்டிருந்ததாக பொலிஸார் முன்னதாக உறுதிப்படுத்தியிருந்தனர்.

மேலும், தேரருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் நீதிமன்றம் விதித்திருந்தது.

சிறுமி கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, 2026 மார்ச் 06 அன்று நிட்டம்புவ பொலிஸில் முறை்பபாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணை தொடங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளின் போது, ​​பாதிக்கப்பட்டவர் முன்னர் நடந்த ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்த விவரங்களை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கம்பஹா பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் நிட்டம்புவ பொலிஸ் மற்றும் பெண்கள், சிறுவர் பணியகம் ஆகியவை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டன.

பின்னர், இவ்வழக்கில் வணக்கத்திற்குரிய ஹேமரத்ன தேரர் மற்றும் சிறுமியின் தாயார் ஆகியோரை சந்தேக நபர்களாக நீதிமன்றம் பெயரிட்டதாக பொலிஸ் தெரிவித்தது.