தலைப்புச் செய்திகள்

குருநாகல் மாநகர சபை பிரதி மேயருக்கு விளக்க மறியல்: கட்சியை விட்டு இடைநிறுத்தியுள்ளதாக மக்கள் காங்கிரஸ் அறிவிப்பு

ரு தொழிலதிபருக்கு ஒப்பந்தமொன்றை வழங்குவதற்காக ரூ. 3 மில்லியன் லஞ்சம் கோரியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினர் செய்த, குருநாகல் மாநகர சபையின் பிரதி மேயர் அஷார்தீன் மொய்னுதீன், மே 21 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

லஞ்சத்தைப் பெறுவதற்காகப் பயணம் செய்துகொண்டிருந்தபோது, ​​நேற்று (08) பத்தரமுல்ல பகுதியில் வைத்து இவர் கைதானார்.

குருநாகல் பஸ் நிலையத்தைச் சுத்தம் செய்வதற்கும், அதன் பொதுக் கழிப்பறைகளைப் பராமரிப்பதற்குமான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு ஈடாக, பிரதி மேயர் லஞ்சம் கோரியதாகக் கூறப்படுகிறது.

ஒப்பந்தத்தை வழங்குவதற்காக, சந்தேக நபர் ரூ. 3 மில்லியனை முன்பணமாகவும், மாதந்தோறும் ரூ. 5 லட்சம் செலுத்துமாறும் கோரியதாகக் கூறப்படுகிறது.

அஷார்தின் மொய்னுதீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) சார்பில், குருநாகல் மாநகர சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், சபை நிர்வாகம் அமைக்கப்பட்டபோது தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சிக்குத் தனது ஆதரவை வழங்கியதைத் தொடர்ந்து, அவர் பிரதி மேயராக நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையில், லஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குருநாகல் மாநகர சபையின் பிரதி மேயர் அஷார்தீன் மொய்னுதீனின் கட்சி உறுப்பினர் பதவி இன்று (09) உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிவித்துள்ளது.