
வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள காடுகளை அழித்தார் என்றும் அங்கு மீள்குடியேற்றங்களை ஏற்படுத்தினார் எனவும் முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, றிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த மனுவை விசாரிப்பதிலிருந்து உச்ச நீதிமன்ற நீதியரசர் ஒருவர் இன்று (27) விலகிக்கொண்டார்.
இந்த மேல்முறையீடு, நீதியரசர்கள் ஏ.எச்.எம்.டி. நவாஸ், சம்பத் அபயகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வின் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது, தனிப்பட்ட காரணங்களுக்காக மனுவை விசாரிப்பதிலிருந்து விலகுவதாக நீதியரசர் நவாஸ் அறிவித்தார்.
இந்த நிலையில் செப்டம்பர் 9 அன்று – மற்றொரு அமர்வின் முன்பாக, குறித்த மனுவை அழைக்குமாறு அந்த அமர்வு உத்தரவிட்டது.
வில்பத்து காடுகள் அழிக்கப்பட்டமை மற்றும் றிஷாட் பதியுதீனின் வழிகாட்டுதலின் கீழ் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் 2015-ல் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு ரிட் மனுவிலிருந்து இந்த வழக்கு உருவானது.
அந்தக் குற்றங்களுக்கு முன்னாள் அமைச்சரைப் பொறுப்பாக்கிய மேன்முறையீட்டு நீதிமன்றம், வன வளத் திணைக்களத்தால் சுமார் ரூ. 1.6 பில்லியன் என மதிப்பிடப்பட்ட காடு வளர்ப்புச் செலவுகளை அவரே ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதனையடுத்து, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டவிரோதமானது என வாதிட்டும், அதனை ரத்து செய்யக் கோரியும் றிஷாட் பதியுதீன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
மஹிந்த சமயவர்தன, யசந்த கொடகொட, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபயசேகர உள்ளிட்ட பல உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் முன்னதாக இந்த மனுவை விசாரிப்பதிலிருந்து விலகியிருந்தனர்.



