தலைப்புச் செய்திகள்

பொலிஸ் பேஸ்புக்கில் நபரொருவர் தடைசெய்யப்பட்டமைக்கு எதிராக முறைப்பாடு: பிறகு நடந்ததுதான் சுவாரசியம்

பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் தனக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு, ஒரு சமூக ஊடகப் பயனாளர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிட்டமையை அடுத்து, அந்தத் தடை நீக்கப்பட்டது.

ருக்ஷன் பிரியநாத் என்பவர் பேஸ்புக்கில் ஒரு கடிதத்தைப் பகிர்ந்து பதிவொன்றை இட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிடுகையில்; இணையத்தில் பொலிஸ் திணைக்களத்தை விமர்சிக்கும் கருத்துக்களைப் பதிவிட்டதால் தனக்குத் தடை விதிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். ஓர் அரச நிறுவனம் – தனக்குத் தடை விதிக்கக் கூடாது என்றும், கருத்துச் சுதந்திரம் குறித்த கவலைகளை எழுப்பியும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் புகார் அளித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

‘பொலிஸ் ஊடகப் பிரிவின் அதிகாரிகள், இந்தத் தடை வேண்டுமென்றே விதிக்கப்படவில்லை என்றும், அது தானாகவே விதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் இது போன்ற நடவடிக்கை குறித்து தனக்குத் தெரிவிக்கவில்லை’ என்றும் ருக்ஷன் பிரியநாத் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பிறகு தனக்குத் தடை நீக்கப்பட்டுவிட்டதாக ருக்ஷன் பிரியநாத் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களை விமர்சிப்பதை, அவற்றுக்கு எதிரான எதிர்ப்பாகக் கருதக்கூடாது என்றும், பொது அமைப்புகள் இணையத்தில் செயல்படும் விதத்தில் அதிகப் பொறுப்புக்கூறல் தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.