தலைப்புச் செய்திகள்

பேராயர் பதவியிலிருந்து மெல்கம் ரஞ்சித் விலகுகிறாரா?

கொழும்பு பேராயர் பதவியிலிருந்து மல்கம் ரஞ்சித் விலக முடிவு செய்துள்ளதாகக் கூறும் செய்திகள் தவறானவை என்று, கொழும்பு பேராயர் மறைமாவட்டத்தின் மக்கள் தொடர்புப் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிறிசாந்த தெரிவித்துள்ளார்.

ஒரு பேராயரின் நியமனம் அல்லது ஓய்வு தொடர்பான முடிவுகள் வத்திக்கானால் மட்டுமே எடுக்கப்படுகின்றன என்று தெளிவுபடுத்தினார்.

திருச்சபைச் சட்டத்தின்படி, பொதுவாக 80 வயதை எட்டியவுடன் ஓய்வு பெறுவதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இறுதி முடிவு திருத்தந்தையிடமே (பொப்) உள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதன்படி, கர்தினால் மல்கம் ரஞ்சித் – அடுத்த ஆண்டு 80 வயதை எட்டவிருந்தாலும், அவரது ஓய்வு குறித்து இன்றுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த ஆண்டின் இறுதிக்குள் இலங்கையின் கத்தோலிக்கத் திருச்சபையில் ஒரு பெரிய தலைமை மாற்றம் எதிர்பார்க்கப்படுவதாக, பெயர் குறிப்பிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி வெளியான சமீபத்திய ஊடகச் செய்திகளுக்குப் பதிலளிக்கும் விதமாக இந்தத் தெளிவுபடுத்தல்கள் வந்துள்ளன.