
வாகனப் பதிவுத் தகடுகளில் உள்ள மாகாணக் குறியீடு நீக்கப்பட்டதற்குக் காரணம், அந்தத் திட்டத்தின் தோல்வியே என்று, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் ஒப்புக்கொண்டுள்ளது.
இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது, வாகனப் பதிவுத் தகடுகளில் மாகாணக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டதாக, பொது நிதிக்கான நாடாளுமன்றக் குழுவுடனான (COPF) ஒரு அமர்வின் போது, மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
“போரின் போது வாகனங்களின் தோற்றத்தை பொலிஸார் அடையாளம் காண உதவும் வகையில், வாகனப் பதிவுத் தகடுகளில் – மாகாணக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டம் பொலிஸ் திணைக்களத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டது. ரேடியோ அதிர்வெண் அடையாளங்காட்டியுடன் (RFID) பதிவுத் தகடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இருப்பினும், ரேடியோ அதிர்வெண் அடையாளங்காட்டியைப் படிப்பதற்குத் தேவையான உபகரணங்கள் பொலிஸ் திணைக்களத்திடம் இல்லாததால், வாகனப் பதிவுத் தகடுகளில் இருந்து மாகாணக் குறியீட்டையும் ரேடியோ அதிர்வெண் அடையாளங்காட்டியையும் நீக்க நாங்கள் முடிவு செய்தோம்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறிப்பிட்ட பதிவுத் தகடுகளுக்காகப் பொதுமக்கள் பெரும் தொகையைச் செலுத்துவதும், இந்த நீக்கத்திற்கான முடிவுக்குக் காரணம் என்று அவர்கள் மேலும் கூறினர்.

தற்போது வாகனங்களை அடையாளம் காணும் திறன் பொலிஸ் திணைக்களத்துக்கு உள்ளதா என்று கோப் குழு வினவியபோது, அத்தகைய முறையில் வாகனங்களை அடையாளம் காண முடியாது என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.
“தற்போது எந்தப் போர்ச் சூழலும் இல்லாததால், இந்த அமைப்பு தேவையில்லை என்று பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக எங்களுக்கு எந்தக் கோரிக்கையும் வரவில்லை” என்று அவர்கள் மேலும் கூறினர்.
இந்தத் தகவலுக்குப் பதிலளித்த கோப் குழு தலைவர் ஹர்ஷ டி சில்வா, இந்தத் திட்டம் பொது நிதியை முற்றிலும் வீணடிப்பதாகக் கருதப்படுவதாகக் கூறினார்.
வாகனப் பதிவு எண்களில் உள்ள ரேடியோ அதிர்வெண் அடையாளத்தைப் (Radio Frequency Identification) படிப்பதற்குத் தேவையான உபகரணங்கள் பொலிஸ் திணைக்களத்திடம் இல்லாத நேரத்தில், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தால் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.


