
– நூருல் ஹுதா உமர் –
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்களின் நீண்டநாள் அரசியல் அபிலாசையாக இருந்துவரும், கல்முனை கரையோர நிர்வாக மாவட்டத்தை பெற்றுக்கொடுக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியால் ஒருபோதும் முடியாது என முன்னாள் ராஜாங்க அமைச்சரும், அக்கட்சியின் முன்னாள் செயலாளருமாக பதவி வகித்த எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார்.
மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் மர்ஹூம் ஏ.எல்.எம். சலீம் நினைவாக நேற்றுமுன்தினம் (11) நிந்தவூரில் நடைபெற்ற ‘அழியாத எழுத்து, மறையாத நினைவு’ நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
மெஸ்ரோ அமைப்பின் ஏற்பாட்டில் அதன் ஸ்தாபக தலைவர் முன்னாள் ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில், நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், தென்கிழக்கு பல்கலைக்கழக கலை மற்றும் கலாச்சார பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம். பாஸில், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தலைவர் எம்.பி.எம். பைரூஸ் உட்பட – அரசியல் மற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து உரையாற்றிய ஹசன் அலி;
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆரம்ப நோக்கத்திலிருந்து விலகி செயற்பட்டு வருவதாகக் கடுமையாக விமர்சித்தார். கட்சியின் ஸ்தாபகர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் முன்வைத்த இலக்குகள், குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கு தனித்துவமான நிர்வாக அங்கீகாரம் வழங்கும் கனவு, இதுவரை நடைமுறைக்கு வரவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், தமிழ்–முஸ்லிம் நல்லுறவை வலுப்படுத்தும் முயற்சிகளில் அஷ்ரப் காட்டிய உறுதியையும், இலக்குகளையும் முன்னெடுக்க முக்கிய பங்கு வகித்தவர் மறைந்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் என்றும் ஹசன் அலி கூறினார்.
அம்பாறை மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம் மக்களுக்கு நிர்வாக மாவட்டம் ஒன்றை உருவாக்குவதுதான் மு.கா.வின் அடிப்படை இலக்காக இருந்த போதிலும், அது இன்னும் எட்டப்படாதது கட்சியின் பலவீனமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இன்றைய சூழலில் பல முஸ்லிம் அரசியல் கட்சிகள் இருப்பினும், இத்தகைய அடிப்படை உரிமைகளைப் பெற முடியாத நிலை கவலைக்குரியது எனக் கூறிய அவர், முஸ்லிம் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்குவது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
இந்த அடிப்படை நோக்கங்களை மறந்து செயல்படுவதால்தான், ‘முஸ்லிம் கட்சி’ என்ற அடையாளத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இழந்து வருவதாகவும் ஹசன் அலி தெரிவித்தார்.


