
ஈரானுக்கு சீனா ஆயுதங்களை வழங்கினால் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும் என சீனாவை, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களில் ஈரானின் வான் பாதுகாப்பின் பெரும் பகுதி அழிக்கப்பட்ட நிலையில், மோதலின் போது தாழ்வாக பறக்கும் அமெரிக்க ராணுவ விமானங்களை குறிவைத்து தாக்கும் மான்பட்ஸ் (தோளில் சுமந்து சென்று சுடும் வான்பாதுகாப்பு ஏவுகணைகள்) ஆயுதத்தை ஈரான் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது
அமெரிக்காவின் F15 போர் விமானத்தையும் ஈரான் இதன் மூலமே வீழ்த்தியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்த சூழலில் போர் நிறுத்தத்திற்கு மத்தியில் ஈரானுக்கு உதவ மான்பட்ஸ் ஏவுகணைகளை சீனா வழங்க தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்ததாக சர்வதேச செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்து சில வாரங்களில் இந்த ஆயுதங்கள் ஈரானை சென்றடையலாம் எனவும், அதனை மறைமுகமாக மூன்றாம் தரப்பு நாடுகள் வழியாக அனுப்புவதற்கு சீனா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போர் நிறுத்தத்தின் போது, சேதமடைந்த வான் பாதுகாப்பு அமைப்பை மீண்டும் கட்டமைக்க ஈரான் முயன்று வருவதாக நம்பும் அமெரிக்கா, இதனை அச்சுறுத்தலாகவே கருதுகிறது.
சீனா இப்படிச் செய்தால் பெரும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என செய்தியாளர்களிடையே ட்ரம்ப் மிகவும் காட்டமாக பேசியிருந்தார்.
ஆனால் அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள சீனா, மோதலில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு தரப்புக்கும் ஒருபோதும் ஆயுதங்களை வழங்கியது இல்லை என கூறியுள்ளது.
மேலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும், பரபரப்பை உண்டாக்குவதையும் அமெரிக்கா தவிர்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.


