
மத்திய கிழக்கு யுத்தத்தின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் ஒரு புதிய நிவாரணத் தொகுதியை அறிமுகப்படுத்தியுள்ளது என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (07) உரையாற்றிய ஜனாதிபதி அனுர திசாநாயக்க; எரிபொருள், ஆற்றல் மற்றும் எரிவாயு ஆகிய மூன்று முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.
எரிபொருள் சலுகை குறித்துப் பேசிய ஜனாதிபதி, மே 01 ஆம் திகதி அல்லது அதற்கு நெருங்கிய திகதியில் எரிபொருள் விலை கணக்கிடப்பட்டு, அந்த உண்மையான விலையின் அடிப்படையில், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ. 100 மற்றும் ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு ரூ. 20 மானியமாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.
மூன்றாண்டுத் திட்டத்திற்காக ரூ. 60 பில்லியன் ஒதுக்கப்பட்டு, இதற்கென அரசாங்கம் மாதத்திற்கு ரூ. 20 பில்லியன் செலவிடும் என்றும் அவர் மேலும் விவரித்தார்.
சூப்பர் டீசல் மற்றும் சூப்பர் பெட்ரோல் ஆகியவை தற்போதைய சந்தை விலையின் அடிப்படையில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பொருளாதார நிவாரணத் தொகுதிக்காக ரூ. 100 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.
மேலும், ஒரு நாள் மீன்பிடிப் படகுகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு லீட்டர் எரிபொருளுக்கு ரூ. 50 மானியம் வழங்கப்படும் என்றும், இது மாதத்திற்கு 25 நாட்கள் வரை ஒரு நாளைக்கு 25 லிட்டர் என – உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும், பல நாள் மீன்பிடிப் படகுகளுக்கு ரூ. 150,000 மொத்தக் கொடுப்பனவாக வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உரங்களுக்கான சலுகைகள் குறித்த விவரங்களை அறிவித்த ஜனாதிபதி, நெல்லுக்கு வழங்கப்பட்ட ரூ. 25,000 உர மானியம் ரூ. 30,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலதிக பயிர்களுக்கான ரூ. 15,000 மானியம் ரூ. 18,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அஸ்வெசும கொடுப்பனவு ஏப்ரல் மாதத்துக்கு அதிகரிக்கப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி ரூ. 17,500 கொடுப்பனவு – ரூ. 25,000 ஆகவும், ரூ. 10,000 உதவித்தொகை ரூ. 15,000 ஆகவும், ரூ. 5,000 உதவித்தொகை ரூ. 7,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அடுத்த மூன்று மாதங்களுக்கான பொருளாதார நிவாரணத் தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய ஜனாதிபதி, அடுத்தகட்ட நடவடிக்கை உலக நிலவரங்களுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படும் என்றார்.


