
ஈரானில் அமெரிக்க விமானப்படை வீரரொருவர் மீட்கப்பட்டதாக – முதன்முதலில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர், அந்தத் தகவலை எவ்வாறு பெற்றார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றும், மறுத்தால் அவர் சிறையில் அடைக்கப்படுவார் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திங்களன்று எச்சரித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடந்த ஊடக சந்திப்பில் டிரம்ப் இவ்வாறு கூறியமை, ஊடகங்கள் மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் நெருக்குவாரம் அதிகரித்துள்ளமையைக் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் குறித்த ஊடகங்களின் செய்திகள் மிகவும் எதிர்மறையாக இருப்பதாக டரம்ப், சமீபத்திய வாரங்களில் தனது உதவியாளர்களிடம் தனிப்பட்ட முறையில் முறையிட்டிரந்தார். மேலும், டிரம்ப்பும் அவருக்க நெருக்கமானவர்களும் சில செய்தி நிறுவனங்களின் செய்திகளைப் பகிரங்கமாக விமர்சித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை ஈரானின் வான்பரப்பில் ஒரு அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு, அதில் இருந்த இரண்டு விமானப்படை வீரர்களில் ஒருவர், அமெரிக்க மீட்புப் படையினரால் வெற்றிகரமாக மீட்கப்பட்டதாகப் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்தத் தகவல் வெளியானமை – இரண்டாவது விமானப்படை வீரரை மீட்க நடந்து கொண்டிருந்த முயற்சிக்கு அச்சுறுத்தலாக இருந்த என்று டிரம்ப் கூறியுள்ளார். இருப்பினும், அந்த விமானப்படை வீரர் இறுதியில் வெற்றிகரமாக மீட்கப்பட்டார்.

“முதல் சம்பவம் பற்றி நாங்கள் ஒரு மணி நேரம் பேசவில்லை. பின்னர் யாரோ ஒருவர் ஒரு தகவலைக் கசியவிட்டார், அந்தக் கசியவிட்டவரைக் கண்டுபிடிப்போம் என நம்புகிறோம். அந்தக் கசியவிட்டவரைக் கண்டுபிடிக்க நாங்கள் மிகவும் தீவிரமாகத் தேடிக்கொண்டிருக்கிறோம்” என்று டிரம்ப் கூறினார்.
“அதை வெளியிட்ட ஊடக நிறுவனத்திடம் நாங்கள் சென்று, ‘அதைச் சொல்லுங்கள் அல்லது சிறைக்குச் செல்லுங்கள்’ என்று சொல்லப் போகிறோம்.”
டிரம்ப் எந்த ஊடக நிறுவனத்தை அல்லது செய்தியாளரைக் குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. தி நியூயார்க் டைம்ஸ், சிபிஎஸ் நியூஸ் மற்றும் ஆக்சியோஸ் உட்பட பல ஊடக நிறுவனங்கள், குறுகிய காலத்திற்குள் முதல் விமானப்படை வீரரின் மீட்பு குறித்து செய்தி வெளியிட்டதாகத் தெரிகிறது.
டிரம்ப் எந்த ஊடகவியலாளரை மிரட்டுகிறார் என்று கேட்டபோது, வெள்ளை மாளிகை உடனடியாகப் பதிலளிக்கவில்லை.


