தலைப்புச் செய்திகள்

நெற் செய்கைக்கு மட்டுமே யூரியா உரம் வழங்கத் தீர்மானம்

மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடியின் காரணமாக, நாடளாவிய ரீதியில் யூரியா உரக் கையிருப்பு குறைவாக உள்ளதைக் காரணம் காட்டி, நெற் செய்கைக்கு மட்டுமே யூரியாவை பிரத்தியேகமாக வழங்குவதற்கு விவசாய அபிவிருத்தித் திணைக்களம் முடிவு செய்துள்ளது.

2026 சிறு போகத்துக்கான கலப்பற்ற யூரியா உரம், விவசாய சேவை நிலையங்கள் மூலம் – நெற் செய்கைக்கு மட்டுமே விநியோகிக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தத் தீர்மானத்தை நாடு முழுவதுமுள்ள அனைத்து விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் திணைக்களம் அறிவித்துள்ளதோடு, ஒவ்வொரு விவசாயியும் செய்கை பண்ணும் நிலத்தின் அளவின் அடிப்படையில் மட்டுமே உரத்தை வழங்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, நெற் செய்கைக் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையிலோ அல்லது நெற் செய்கை சரிபார்க்கப்பட்ட பின்னரோ, விவசாயிகளுக்கு உரம் வழங்கப்படும்.

வழங்கப்படும் உரத்தின் அளவு, சரிபார்க்கப்பட்ட நெற்செய்கைப் பரப்பிற்கு நேரடியாகப் பொருந்துவதை உறுதி செய்வதற்காக, கணினி அமைப்பில் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட விவசாயிகளின் தரவுகள் இந்தச் செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், 2026 சிறுபோக பருவத்தில் – நெற் செய்கை தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, தற்போதுள்ள உரக் கையிருப்பைத் திறமையாக நிர்வகிக்குமாறு அனைத்து விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.