தலைப்புச் செய்திகள்

பாடசாலை மாணவிகளுக்கு, மாதவிடாய் நாப்கின் வழங்கும் திட்டம் தொடரும்

பாடசாலை மாணவிகளுக்கு மாதவிடாய் நாப்கின்கள் வழங்கும் திட்டத்தைத் தொடர அரசு முடிவு செய்துள்ளது.

இத்திட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் அரச உதவி பெறும் விசேட பாடசாலைகளில் 06ஆம் வகுப்புக்கு மேல் பயிலும் சுமார் 1.05 மில்லியன் மாணவிகளை உள்ளடக்கியதாகும்.

இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாணவிக்கும் தலா ரூ. 720 மதிப்புள்ள இரண்டு வவுச்சர்கள் வழங்கப்படும். இதன் மூலம், ஆண்டுக்கு மொத்தமாக ரூ. 1,440 வழங்கப்படும்.

இந்த வவுச்சர்களைப் பயன்படுத்தி, மாணவிகள் ஆண்டு முழுவதும் மாதவிடாய் நாப்கின்களை வாங்கிக்கொள்ளலாம்.

அதாவது, தலா எட்டு நாப்கின்கள் கொண்ட 12 பாக்கெட்டுகளை ஒரு பாக்கெட் ரூ. 120 என்ற விலையிலோ அல்லது தலா பத்து நாப்கின்கள் கொண்ட எட்டு பாக்கெட்டுகளை ஒரு பாக்கெட் ரூ. 180 என்ற விலையிலோ வாங்கிக்கொள்ளலாம்.

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் சமர்ப்பித்த, 2026ஆம் ஆண்டிலும் மாதவிடாய் நாப்கின் விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

மாதவிடாய் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் அவர்களின் கல்வியைத் தொடர்வதற்குத் தடையாக அமையாமல் இருப்பதை உறுதி செய்வதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.