
‘ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு எதிரான அனைத்து ராணுவத் தாக்குதல்களையும் ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு போர் துறைக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்’ என்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் அமெரிக்கா நல்ல மற்றும் ஆக்கப்பூர்வமான உரையாடல்களை நடத்தியுள்ளதாகவும், ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு எதிரான எந்தவொரு ராணுவத் தாக்குதல்களையும் ஒத்திவைக்குமாறு ராணுவத்திற்கு உத்தரவிடப் போவதாகவும் அவர் இன்று (23) திங்கட்கிழமை தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“மத்திய கிழக்கில் நமது பகைமைகளுக்கு ஒரு முழுமையான மற்றும் மொத்தத் தீர்வைக் காண்பது தொடர்பாக, கடந்த இரண்டு நாட்களாக அமெரிக்காவும் ஈரானும் மிகவும் நல்ல மற்றும் ஆக்கப்பூர்வமான உரையாடல்களை நடத்தியுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘தொடர்ந்து நடைபெற்று வரும் சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்களின் வெற்றியைப் பொறுத்து, ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு எதிரான அனைத்து இராணுவத் தாக்குதல்களையும் ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு போர் துறைக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்’ என, அந்தப் பதிவில் டொனால்ட் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை 48 மணித்தியாலங்களுக்குள் ஈரான் முழுமையாக திறக்க வேண்டுமென்றும், தவறினால் ஈரானின் மின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும், நேற்று ஞாயிற்றுக்கிழமை டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில், தற்போது – தனது தாக்குதல் திட்டத்திலிருந்து பின்வாங்கியுள்ளார்.


