
விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்து 32 பேர் காப்பாற்றப் பட்ட அவேளை, உடல்களும் கைப்பற்றப்பட்டன என்று, கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்தில்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இதனைக் கூறினார்.
இலங்கையின் தெற்கு கடற்பிராந்தியத்துக்கு அப்பால் இன்று (04) அதிகாலை போர்க் கப்பலொன்றே விபத்துக்குள்ளானதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், குறித்த கப்பலை நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று மோதியதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை முற்றாக நிராகரிப்பதாக கடற்படை பேச்சாளர் இதன்போது கூறியுள்ளார்.
விபத்துக்குள்ளான கப்பல் எவ்வாறு விபத்துக்குள்ளாகியது என்ற விடயத்தை தொழில்நுட்ப ரீதியில் – ஆராய்ந்தே தீர்மானிக்க வேண்டும் எனவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பது தமது முதற்கடமை என்ற அடிப்படையில், இலங்கை கடற்படையினர் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடற்படையின், உயிர்காப்பு, தேடுதல் மற்றும் மீட்பு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய – இன்று அதிகாலை குறித்த கடற் பகுதிக்கு மீட்பு பிரிவினர் சென்றதாக அவர் குறிப்பிட்டார்.
முதலில், எண்ணெய் படலமும், உயிர்காப்பு அங்கிகளையும் கடற்படையினர் கண்டதாகவும், அதன் பின்னரே அங்கு தேடுதல் விரிவுபடுத்தப்பட்டதாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
இதன்போது பல உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் எண்ணிக்கையை தற்போது உறுதி செய்ய முடியாத நிலை உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து மீட்கப்பட்ட 32 ஈரானிய பிரஜைகள், காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான கப்பல் – இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசிப்பதற்கு முறையான அனுமதி கோரப்பட்டதா என்ற கேள்விக்கு பதில் வழங்கிய கடற்படை பேச்சாளர், இந்த விடயங்கள் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்தக் கப்பலில் இருந்த 100 பேரளவில் காணாமல் போயிருக்கலாம் என, அல் ஜசீரா தெரிவித்துள்ளது.


