
தோள்களில் சுமந்து தாக்கக்கூடிய ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்குவதற்கு, இலங்கைப் பெறுமதியில் 18203 கோடி ரூபாய்க்கு ஈரான் ரகசிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாக ஃபினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், அடுத்த மூன்றாண்டுகளில் 500 Verba ஏவுகணை சாதனங்களையும், 2,500 9M336 ஏவுகணைகளையும் ஈரானுக்கு ரஷ்யா வழங்கும் என ரகசிய ஆவணத்தை குறிப்பிட்டு ஃபினான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக ரஷ்ய அரசாங்கத்தின் ஆயுத ஏற்றுமதி நிறுவனமான Rosoboronexport மற்றும் ஈரானின் பாதுகாப்பு மற்றும் ஆயுதப்படை தளவாட அமைச்சகத்தின் (MODAFL) மொஸ்கோ பிரதிநிதி இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக ஃபினான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

ஈரான் – அமெரிக்கா இடையே அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாமல், அது போர் பதற்றமாக மாறியிருக்கும் சூழலில், ஈரானுக்கு ரஷ்யா ரகசிய ஒப்பந்தத்தின் மூலம் ஆயுதம் வழங்குவதாக கூறப்படுவது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.


