
தனி நபர் ஒருவரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய – மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 16,730 தேவைப்படுகிறது என, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 2026க்கான அதிகாரப்பூர்வ வறுமைக் கோடு புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ள திணைக்களம் – இந்தத் தகவலைக் குறிப்பிட்டுள்ளது.
தரவுகளின்படி, அடிப்படை மாதாந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான அதிகபட்ச செலவு கொழும்பு மாவட்டத்தில் ரூ. 18,044 ஆகவும், மிகக் குறைந்த செலவு மொனராகலை மாவட்டத்தில் ரூ. 15,997 ஆகவும் பதிவாகியுள்ளது.
வறுமைக் கோடு என்பது – அடிப்படை உணவு மற்றும் உணவு அல்லாத தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு நபருக்குத் தேவையான குறைந்தபட்ச செலவினத்தைக் குறிக்கிறது. மேலும் இது பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில் மாதந்தோறும் திருத்தப்படுகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களத் தகவலின் படி, 2012/13ஆம் ஆண்டின் வீட்டு வருமானம் மற்றும் செலவு கணக்கெடுப்பின் அடிப்படையில் அதிகாரப்பூர்வ வறுமைக் கோடு புதுப்பிக்கப்பட்டது.

தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டைப் பயன்படுத்தி – விலை வேறுபாடுகளை சரிசெய்து, மாவட்ட அதிகாரப்பூர்வ வறுமைக் கோடுகள் மறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


