தலைப்புச் செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளில் தலையிட வேண்டாம்: கொழும்பு மறை மாவட்டம் வலியுறுத்தல்

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் நடந்து வரும் விசாரணைகளில் தலையிட வேண்டாம் என்று, கொழும்பு மறைமாவட்டத்தின் தகவல் தொடர்பு பணிப்பாளர் அருட்தந்தை சிரில் காமினி பெனாண்டோ அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று (26’) நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அருட்தந்தை சிரில் காமினி பெனாண்டோ; விசாரணைகளைத் தடுக்கும் எந்தவொரு முயற்சியும் – பாதிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும் என்று கூறியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குண்டுவெடிப்புகளில் கிட்டத்தட்ட 300 பேர் கொல்லப்பட்டனர் எனத் தெரிவித்துள்ள அருட்தந்தை சிரில் காமினி பெனாண்டோ; இந்தக் கொலையை ஒரு ‘காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்’ என்று விவரித்தார். மேலும், ஈஸ்டர் தின சமய நிகழ்வுகளில் கலந்து கொண்ட வழிபாட்டாளர்கள் மற்றும் பல்வேறு மதங்கள் மற்றும் இன சமூகங்களைச் சேர்ந்த தனிநபர்களின் உயிரைப் பறித்த ‘படுகொலை’ என்றும் அந்தச் சம்பவங்களை குறிப்பிட்டார்.

ஏப்ரல் 21, 2019 அன்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் புனித அந்தோனியார் ஆலயம், புனித செபாஸ்டியன் தேவாலயம் மற்றும் கொழும்பில் உள்ள ஹோட்டல்கள் உட்பட பல இடங்கள் பாதிக்கப்பட்டன.

நாட்டில் சட்டத்தின் ஆட்சி – முறையாக நிலைநிறுத்தப்படுவதை உறுதி செய்வதற்கு தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொணர்வது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

அவ்வாறு செய்யத் தவறினால், கடுமையான குற்றங்களைச் செய்பவர்கள் எந்த விளைவும் இல்லாமல், நீதியைத் தவிர்க்க முடியும் என்ற ஆபத்தான செய்தியை அனுப்பும் என்றும் அவர் எச்சரித்தார்.

விசாரணைகளை அரசியலாக்குவது தேவையற்றது என்றும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சுயாதீனமாக விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, விசாரணைகளில் தலையீடு இல்லாமல் – விசாரணையாளர்கள் தங்கள் கடமைகளைச் செய்ய அனுமதிப்பது மிக முக்கியம் என்றும் அவர் கூறினார்.

விசாரணைகளைத் தடம் புரளச் செய்யும் எந்தவொரு முயற்சியும், குண்டுவெடிப்புகளில் உயிர் இழந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்களுக்கு எதிராக மற்றொரு அநீதியைச் செய்வதற்கு ஒப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்களும் அனைத்து பங்குதாரர்களும் பொறுமையாக இருக்குமாறும், விசாரணைகள் சுயாதீனமாக தொடர அனுமதிக்குமாறும், அர்த்தமுள்ள முடிவுகள் வெளிவரும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துமாறும், அருட்தந்தை அழைப்பு விடுத்தார்.

தாக்குதல்களுக்குப் பின்னால் ஏதேனும் அரசியல் கை இருந்ததா, யார் பொறுப்பாக இருக்கலாம், அவற்றை நடத்தியதன் பின்னணியில் உள்ள நோக்கங்கள் என்ன என்பதைத் தீர்மானிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும், முழு உண்மையும் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.