தலைப்புச் செய்திகள்

ஊடகவியலாளர் இர்பானின் தந்தை கொலை: புத்தளத்தில் சோகம்

புத்தளம் – தில்லியடி அல்-காசிம் கிராமத்திற்கு அருகிலுள்ள வீதியின் அருகே முச்சக்கர வண்டி சாரதியொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர் 72 வயதான அப்துல் லத்தீப் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் புத்தளம் – தில்லியடியில் வசிப்பவர் என்றும், ஐந்து பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் கூறுகின்றனர்.

ஊடகவியலாளர் ஏ.எல். இர்பான் – இறந்தவரின் பிள்ளைகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முச்சக்கர வண்டி சாரதி நேற்று (21) இரவு வீட்டில் இருந்தபோது, யாரோ ஒருவர் பயணமொன்றுக்கு அழைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள். காலையில் அவர் திரும்பி வராததால், அவரின் குடும்பத்தினர் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்தனர்.

பின்னர் அவருடைய வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள அடபன வில்லுவ கிராமத்திற்குச் செல்லும் பாதையில் உள்ள கால்வாய் அருகே, அவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. முச்சக்கர வண்டி கொலையாளிகளால் கொண்டு செல்லப்பட்டதாக நம்பப்பட்டது.

குறித்த இடத்தைக் கடந்து கொண்ட ஒருவர் – இறந்தவரின் உடலைக் கண்டு தகவல் வழங்கியிருந்தார்.