தலைப்புச் செய்திகள்

ட்ரம்ப் உலக நாடுகளுக்கு விதித்த வரிகளை, அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்துச் செய்தது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் – கடந்த ஆண்டு அமுல்படுத்திய உலகளாவிய இறக்குமதி வரியை அமெரிக்காவின் உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் என கூறி, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கடந்த ஆண்டு டிரம்ப் வரி விதித்தார்.

நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பதிலாக, 1977 ஆம் ஆண்டின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தைப் பயன்படுத்தி – டிரம்ப் நிர்வாகம் இந்த வரிகளை விதித்தது.

ஓகஸ்ட் 2025 இல், அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் டிரம்பின் பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று தீர்ப்பளித்தது, ஆனால் அவை அமுலில் இருக்க அனுமதிக்கப்பட்டன.

அந்த மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய – வெள்ளை மாளிகை கோரிக்கை வைத்ததால், விவகாரம் இறுதியில் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது.

அமெரிக்க உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், டிரம்ப் தனது அதிகாரங்களை மீறி தேசிய அவசர நிலைக்காக உருவாக்கப்பட்ட சட்டத்தைப் பயன்படுத்தியதாகக் கூறியது.

சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம் – வரிகளை விதிக்க அனுமதிக்கவில்லை என நீதிபதிகள் இதன்போது கூறினார்கள்.

(பிபிசி)