தலைப்புச் செய்திகள்

ஈரானுக்கு ட்ரம்ப் 10 நாள் காலக்கெடு

பத்து நாட்களுக்குள் ஒப்பந்தத்தை முடிவ செய்யவில்லையென்றால், மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு கெடு விதித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் – கடும் பதிலடியைச் சந்திக்க நேரிடும் என ஈரானும் எச்சரித்துள்ளது.

வொஷிங்டனில் தனது அமைதிச் சபை (Board of Peace) கூட்டத்தில் உலக தலைவர்களுக்கு மத்தியில் பேசிய ட்ரம்ப்; “ஈரானுடனான பேச்சுவார்த்தையில் இதுவரை அர்த்தமுள்ள ஒப்பந்த மேற்கொள்ளப்படவில்லை. அதிகபட்சமாக 10 முதல் 15 நாட்களுக்குள் ஈரான் ஒப்பந்தத்திற்கு முன்வரவில்லையனில், அடுத்து மோசமான விளைவுகளை உலகம் கண்டுகொள்ளும்” என பகிரங்கமாக எச்சரித்தார்.

ஆனாலும், ஈரான் மீது அமெரிக்கா – ராணுவ நடவடிக்கையில் ஈடுபடுமா என்கிற கேள்விக்கு நேரடியாக ட்ரம்ப் பதிலளிக்கவில்லை.

இந்த நிலையில், அமெரிக்கா தாக்குதல் தொடுத்தால், பிராந்திலுள்ள அமெரிக்காவின் தளங்கள் எங்கள் இலக்குகளாக மாறும் என, ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.

ட்ரம்பின் தொடர் அச்சுறுத்தல்கள் குறித்து – ஐநா பொதுச் செயலாளரிடமும் ஈரான் முறையிட்டுள்ளது.

எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த அமெரிக்கப் படைகள் ட்ரம்பின் இறுதி முடிவுக்காக காத்திருக்கும் நிலையில், மத்திய கிழக்கில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதேவேளை, தனது நாட்டு மக்களை ஈரானிலிருந்து வெளியேறும் படி – போலந்து நாட்டு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் தாக்குதல்களை எதிர்கொள்ள, ரஷ்ய கடற்படையுடன் இணைந்து ஹோமுஸ் நீரிணையில் பயிற்சி மேற்கண்டதோடு – தனது அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பையும் ஈரான் பலப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.