
பறக்கும் முத்தம் (Flying Kiss) கொடுத்த இளைஞர் ஒருவருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும், 03 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தியாவின் – மகாராஷ்டிரா மாநிலத்தி கடந்த 09 ஆண்டுகளுக்கு முன்பு 16 வயது சிறுமியொருவருக்கு 19 வயது இளைஞரொருவர் பறக்கும் முத்தம் கொடுத்துள்ளார். இது தொடர்பில் நடந்து வந்த வழக்கில், குறித்த இளைஞர் குற்றம் செய்துள்ளார் என நிரூபிக்கப்பட்டமையை அடுத்து, அவருக்கு மேற்படி தண்டனையை விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
2017 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதியன்று ஒரு நிகழ்வொன்றில் வைத்து 19 வயது இளைஞர் ஒருவர், அந்த பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பறக்கும் முத்தம் (Flying Kiss) கொடுத்துள்ளார்.
இதையடுத்து, சிறுமியின் தாயார் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாமென அந்த இளைஞரைக் கண்டித்தார். அப்போது, ஏற்கனவே சிறுமி டியூசனுக்கு சென்று கொண்டிருக்கும் போது அந்த இளைஞர் கையை பிடித்து இழுத்துள்ளார் என்பதும், பிரச்சனை ஏற்படும் என்கிற பயத்தின் காரணமாக அந்த சிறுமி இதனை வெளியில் சொல்லாமல் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து இளைஞரின் குடும்பத்தாரிடம் இது தொடர்பில் முறையிட்டும் பயன் கிடைக்கவில்லை.

இதனால், சம்பவம் குறித்துக் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் – குற்றம் சாட்டப்பட்ட நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, ‘பிளையிங் கிஸ் கொடுத்தது இது குற்றத்தின் கீழ் வராது’ என்று வாதிட்டார்.
ஆனால் அவர் குற்றச் செயலில் ஈடுபடும் மனநிலையுடன்தான் அவ்வாறு நடந்து கொண்டார் என – சிறுமி தரப்பில் கூறப்பட்டது.
மேலும் சட்டத்தரணியின் வாதத்தையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட நபர் பிளையிங் கிஸ் கொடுக்க சைகை காட்டியது நிரூபணமானது.
இதனையடுத்தே, அந்த இளைஞருக்கு நீதிமன்றம் சிறை மற்றும் அபராதம் விதித்தது.
தற்போது அந்த இளைஞருக்குத் திருமணமாகி 03 குழந்தைகள் இருக்கின்றார்கள்.


