
அடையாள விவரங்கள் இல்லாத கிட்டத்தட்ட 09 லட்சம் மொபைல் சிம் கார்டுகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. தேவையான தகவல்கள் சமர்ப்பிக்கப்படாவிட்டால் அவை செயலிழக்கச் செய்யப்படும் என்று – டிஜிட்டல் பொருளாதார பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் பேசிய அவர்; 897,802 சிம் கார்டுகளில் முறையான அடையாள சரிபார்ப்பு இல்லை என்று கூறினார்.
புதிய விதிமுறைகள் – சிம் பதிவு கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதையும், பதிவுத் தேவைகளை முறையாக செயல்படுத்துவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அவர் கூறினார்.
245,811 வணிக சிம் கார்டுகளும் தற்போது பயன்பாட்டில் உள்ளன. சில பதிவு செய்யப்படாத சிம் கார்டுகள் பெரிய அளவிலான கொள்ளைகள் உள்ளிட்ட கடுமையான குற்றங்களில் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொலிஸாரின் விசாரணைகளுக்கு துல்லியமான உரிமையாளர் தரவு தேவைப்படுகிறது. சரிபார்க்கப்பட்ட தகவல்கள் இல்லாமை, குற்றச் செயல்களுக்கு வழிவகுக்கும் என்று அவர் எச்சரித்தார்.

முறையான பதிவு விவரங்கள் இல்லாத சிம் கார்டுகளைப் பயன்படுத்துபவர்கள், தேவையான தகவல்களை வழங்குமாறு அவர் வலியுறுத்தினார், இணங்கத் தவறினால் அவை செயலிழந்து போகும் என்றும் கூறினார்.
குற்றங்களைத் தடுக்கவும் தேசிய பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை அவசியம் என்று கூறிய பிரதியமை்சர், இந்த கட்டுப்பாடுகள் – தேவையற்றவை என்ற எதிர்க்கட்சிகளின் கூற்றுக்களை நிராகரித்தார்.


