தலைப்புச் செய்திகள்

பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில் போதைப்பொருள், பணம், போலி இலக்கத் தகடுகள் மீட்டு

கைது செய்யப்பட்ட பெண்ணொருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், ஒரு தொகை போதைப்பொருள், ஒரு துப்பாக்கி மற்றும் பல போலி வாகன இலக்கத் தகடுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ரத்மலானையைச் சேர்ந்த மேற்படி பெண், ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கல்கிசை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டார்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் பேரில், நேற்று (11) மாலை கல்கிசை பிரிவேனா சாலையில் அமைந்துள்ள ஒரு வீட்டை பொலிஸார் சோதனை செய்தனர்.

இதன்போது 10 கிராம் 260 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள், ரூ. 800,000 பணம், ஒரு துப்பாக்கி, தோட்டாக்கள், மோட்டார் சைக்கிள்களுக்கான எட்டு போலி இலக்கத் தகடுகள், முச்சக்கர வண்டிகளுக்கான நான்கு போலி இலக்கத் தகடுகள், கார்களுக்கான பதினெட்டு போலி இலக்கத் தகடுகள், ஒரு மின்னணு எடைத் தராசு, இரண்டு தங்கச் சங்கிலிகள், ஒரு தங்க வளையல் மற்றும் ஒரு தங்க மோதிரம் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலிடமிருந்து, சந்தேக நபருக்கு இந்தப் பொருட்கள் கிடைத்திருப்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.