தலைப்புச் செய்திகள்

அமரகீர்த்தி அதுகோரல எம்.பி கொலை வழக்கில் 12 பேருக்கு மரண தண்டனை

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவருடைய பாதுகாப்பு அதிகாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீண்ட விசாரணைக்குப் பிறகு கம்பஹா மேல் நீதிமன்ற விசாரணைக் குழுவால் (High Court Trial-at-Bar) தண்டனை அறிவிக்கப்பட்டது.

மேலும் நான்கு பேருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் 23 சந்தேக நபர்கள் கம்பஹா மேல் நீதிமன்ற விசாரணைக் குழுவால் விடுவிக்கப்பட்டனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவருடைய பாதுகாப்பு அதிகாரியைத் தாக்கி கொலை செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், சந்தேக நபர்கள் இன்று (11) காலை கம்பஹா மேல் நீதிமன்ற விசாரணைக் குழுவில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ஜனவரி 14 ஆம் திகதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரலவின் கொலை வழக்கின் தீர்ப்பை அறிவிக்கும் திகதியை கம்பஹா மேல் நீதிமன்ற விசாரணைக் குழு இன்று வரை ஒத்திவைத்தது.

மே 09, 2022 அன்று நாடு தழுவிய வன்முறை சம்பவங்களின் போது, நிட்டம்புவ பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மைக்கு மத்தியில் – பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அவருடை பாதுகாப்பு அதிகாரியான பொலிஸ் கொன்ஸ்டபில் ஒருவரும் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஆரம்பத்தில், அன்று மாலை நிட்டம்புவ பகுதியில் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் பதிவாகியது. அதைத் தொடர்ந்து மொத்தம் 06 பேர் காயமடைந்த வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் மூவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் பின்னர் உறுதிப்படுத்தின.

தகவல்களின்படி, நாடாளுமன்ற உறுப்பினரும் அவரின் பாதுகாப்பு அதிகாரியும் சென்ற வாகனத்தைத் தடுத்து நிறுத்திய போராட்டக்காரர்கள் மீது, துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் படுகாயமடைந்தனர். பின்னர் அருகிலுள்ள கட்டிடத்திற்குள் மறைந்திருந்தபோது நாடாளுமன்ற உறுப்பினரும் அவரது பாதுகாப்பு அதிகாரியும் கொலை செய்யப்பட்டனர்.

அருகிலுள்ள சிசிடிவி கேமராவிலிருந்து பெறப்பட்ட காட்சிகளில், நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல துப்பாக்கியுடன் ஆயுதம் ஏந்திய தனது பாதுகாப்பு அதிகாரியுடன் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்வதைக் காட்டியது.

பின்னர் நாடாளுமன்ற உறுப்பினரின் கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பலர் சந்தேக நபர்களாக – பல சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, கொலைகள் தொடர்பாக 42 நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தார்.