
இலங்கையில் வயது வந்தோரில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர், அதிக எடை அல்லது பருமனானவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால், இலங்கை தொடர்ந்து பொது சுகாதார சவாலை எதிர்கொள்கிறது.
வயம்ப பல்கலைக்கழகத்தின் சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பயன்பாட்டு ஊட்டச்சத்துத் துறை நடத்திய தேசிய ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை ஆய்வில், இந்த விடயம் தெரியவந்துள்ளது.
2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கை, பெரியவர்களிடையே, அதிக எடை மற்றும் உடல் பருமன் பெண்களிடையே கணிசமாக அதிகமாகக் காணப்படுகிறது. ஆண்களை விட பரவல் விகிதம் சராசரியாக 10 சதவீதம் அதிகம் என்று கூறுகின்றது.
இளைய குழந்தைகளிடையே உடல் பருமன் குறைவாகவே காணப்பட்டாலும், இலங்கையில் சுமார் 12 சதவீத இளம் பருவத்தினர் அதிக எடை அல்லது பருமனாக உள்ளனர். இது நீண்டகால சுகாதாரப் பிரச்சினைகளின் வளர்ந்து வரும் அபாயத்தைக் குறிக்கிறது. நாட்டில் அதிகரித்து வரும் தொற்றாத நோய்களின் சுமையுடன் உடல் பருமன் நெருக்கமாக தொடர்புடையது என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இலங்கையில் ஏற்படும் மொத்த இறப்புகளில் 84 சதவீதம் தொற்றா நோய்கள் ஆகும். 2009 மற்றும் 2019 க்கு இடையில் நீரிழிவு தொடர்பான இறப்பு மற்றும் இயலாமை 34.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதிக எடை மற்றும் உடல் பருமன் ஆகியவை நாட்டைப் பாதிக்கும் பரந்த – ஊட்டச்சத்து குறைபாட்டின் இரட்டைச் சுமையின் ஒரு பகுதியாகும். அங்கு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடுகள், உணவு தொடர்பான தொற்றாத நோய்களின் அதிகரித்து வரும் விகிதங்களுடன் இணைந்துள்ளன – என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.
கிட்டத்தட்ட 30 சதவீத பெரியவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது. மேலும் மக்கள்தொகையில் கால் பகுதியினர் நீரிழிவு நோயுடன் வாழ்கின்றனர். இது ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் அதிக உடல் எடையுடன் வலுவாக தொடர்புடைய நிலைமைகளாகும்.
உணவுப் பழக்கவழக்கங்கள் ஒரு முக்கிய காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கை உணவுகள் பெரும்பாலும் அரிசி மற்றும் பிற மாவுச்சத்து நிறைந்த உணவுகளை மையமாகக் கொண்டுள்ளன. பெரும்பாலும் குறைந்த அளவு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளே எடுத்துக் கொள்கின்றனர். பெரியவர்களில் 27.5 சதவீதத்தினர் மட்டுமே உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கப்பட்ட தினசரி உட்கொள்ளல் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்கிறார்கள். அதே நேரத்தில் தேசிய விநியோக அளவுகள் பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகளுக்குக் கீழே உள்ளன.
உணவு தரத்தை மேம்படுத்துதல், பழங்கள் மற்றும் காய்கறி நுகர்வு அதிகரித்தல் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு உட்கொள்ளலைக் குறைத்தல் ஆகியவை உடல் பருமனை நிவர்த்தி செய்வதற்கும் – உணவு தொடர்பான நோய்களைத் தடுப்பதற்கும் அவசியமான படிகள் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது


