தலைப்புச் செய்திகள்

மின்சாரக் கட்டணம் 30 வீதம் குறைக்கப்படும்: எரிசக்தி அமைச்சர் தெரிவிப்பு

அரசாங்கத்தின் வாக்குறுதிக்கு இணங்க, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணம் 30% குறைக்கப்படும் என்று – எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடி இன்று (05) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

“ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான சராசரி செலவு ஏற்கனவே ரூ. 37 லிருந்து ரூ. 29 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது” எனவும் அவர் கூறினார்.

மின்சார உற்பத்தி செலவைக் குறைப்பதன் மூலம் மட்டுமே – மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பது சாத்தியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான செலவைக் குறைக்காமல் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாது. தற்போது செய்யப்படுவது அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி குறைந்த விலைக்கு விற்பதுதான்” என்று அவர் விவரித்தார்.

அரசாங்கம் பதவியேற்றபோது, ​​மின்சாரம் வாங்கி உற்பத்தி செய்வதற்கான செலவு அலகுக்கு ரூ. 37 ஆக இருந்தது என்றும், இந்த எண்ணிக்கை இப்போது ரூ. 29 ஆக, அதாவது 22%மாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்கொடி சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் கூறுகையில், ஒரு அலகுக்கான செலவை ரூ. 25ஆக குறைப்பன் மூலம், வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணங்களை 30%மாக குறைக்க முடியும் என்றார்.