
ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபைசர் முஸ்தபா, தனிநபர் சட்டமூலங்கள் இரண்டை – நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவிடம் கையளித்தார்.
திருமண பதிவு கட்டளை மற்றும் சிவில் நடைமுறைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் இதன் போது சமர்ப்பிக்கப்பட்டது.
இதில், திருமண முறிவு – ஒரு திருமண உறவை மீட்டெடுக்க முடியாத நிலையை (Irretrievable breakdown) விவாகரத்துக்கான சட்டபூர்வ காரணமாக அறிமுகப்படுத்துதல் மற்றும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெறுவதற்கான நடைமுறையை உருவாக்குதல். மேலும், விவாகரத்துக்கான பரஸ்பர சம்மதம் மற்றும் சொத்துப் பிரிவு, பராமரிப்பு மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு ஆகிய விடயங்களில் மாற்றங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும், முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து (திருத்தம்) சட்டமூலமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது1951ஆம் ஆண்டின் சட்டத்தில் சீர்திருத்தங்களை இலக்காகக் கொண்டுள்ளது. இது முக்கிய மாற்றங்களை முன்மொழிகிறது. அவை;
- திருமணத்திற்கான நிலையான குறைந்தபட்ச வயதாக 18 வயதை அங்கீகரித்தல்.
- திருமணப் பதிவேடுகளில் மணமகளின் கையொப்பத்தை கட்டாயமாக்குதல்.
- தகுதிவாய்ந்த பெண்கள் காதிகளாக பணியாற்ற பாலினத் தடைகளை நீக்குதல்.
- புதிதாக நியமிக்கப்பட்ட காதிகள் – சட்டத்தரணிகளாக இருக்க வேண்டும், காதிநீதிமன்றங்களில் சட்டப் பிரதிநிதித்துவத்தை அனுமதித்தல்.
- சட்ட நிலைத்தன்மைக்காக பராமரிப்பு கோரிக்கைகளை நீதவான் நீதிமன்றங்களுக்கு மாற்றுதல்.

இந்த சீர்திருத்தங்கள் நாட்டின் சட்ட மற்றும் கலாச்சார சூழலை மதிக்கும் அதே வேளையில், இலங்கை தனிநபர் சட்டங்களை நவீன சர்வதேச தரங்களுக்கு ஏற்ப கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.


