தலைப்புச் செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்துச் செய்யும் சட்டமூலத்தை எதிர்த்து மனுக்கள் தாக்கல்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை ரத்துசெய்யும் சட்டமூலத்திலுள்ள பல பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவை என்பதை – அறிவிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எம். பெமசிறி, நவரட்ண பண்டா, பி.எம். தீபால் குணசேகர மற்றும் சமன்சிறி ஹேரத் ஆகியோர் மனுவைவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பியசோம உபாலி மற்றும் உபாலி அமரசிறி ஆகியோர் தனி மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

சட்டத்தரணி சனத் விஜேவர்தன மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், முன்மொழியப்பட்ட சட்டமூலத்தின் சில விதிகள் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் கூறுகின்றன.

அதன்படி, சட்டமூலம் இயற்றப்பட வேண்டுமானால், அது நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு, பொது வாக்கெடுப்பில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தை கோரியுள்ளனர்.