
இலங்கை மின்சார சபையின் சுய விருப்பிலான ஓய்வு பெறும் திட்டத்தின் கீழ் (VRS) விண்ணப்பித்த 2200 ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கு தலையிடுமாறு கோரி, அந்த ஊழியர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
ஊழியர்கள் தங்கள் கடிதத்தில்; ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தாங்களாகவே முன்வந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாகவும், அதற்கேற்ப தங்கள் எதிர்கால வாழ்வாதாரத்தைத் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இந்த ஓய்வுத் திட்டம் தொடர்ந்து தாமதமாகி வருவதால், தாங்கள் நிச்சயமற்ற தன்மையை எதிர் கொண்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை மின்சார சபை கலைக்கப்பட்ட திகதி குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு இல்லாததால், சபையை விட்டு வெளியேறி, ஓய்வுக்குப் பிந்தைய திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என்றும் ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த திகதியை அறிவிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முடிக்கப்பட்டுள்ளன என்று, கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்சார சீர்திருத்த செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியாளர் புபுது நிரோஷன் ஹெடிகல்லகேவும், அவரின் ராஜினாமாவை சமர்ப்பிக்கும் போது இதை உறுதிப்படுத்தினார்.
அதன்படி, எரிசக்தி அமைச்சர் நியமிக்கப்பட்ட திகதியை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவது மட்டுமே – மீதமுள்ள ஒரே படி என்று ஊழியர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, இந்த நிச்சயமற்ற தன்மையை முடிவுக்குக் கொண்டுவர, ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள பிப்ரவரி 01, 2026 ஐ, உடனடி வர்த்தமானி அறிவிப்பின் மூலம் முறையாக நியமிக்கப்பட்ட திகதியாக அறிவிக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை தமது கடிதத்தில் விடுத்துள்ளனர்.



