தலைப்புச் செய்திகள்

கண்டி மாவட்டத்துக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள ‘நுவர அக்கா மற்றும் ‘மாத்தலே’ அக்கா தொடர்பில் எச்சரிக்கை

ண்டி மாவட்டத்தில் போதைப்பொருள் பழக்கம் முந்தைய ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக, மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க நேற்று (14) தெரிவித்தார்.

கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில் நடைபெற்ற ‘நாடு ஒன்றிணைந்து’ தேசிய நடவடிக்கையில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.

கண்டி மாவட்டத்தில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் பயன்பாட்டில் கூர்மையான அதிகரிப்பு இருப்பதை பொலிஸ் சோதனை அறிக்கைகள் சுட்டிக்காட்டுவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

“சோதனை அறிக்கைகளின்படி, கண்டி பிரிவில் 2025 ஆம் ஆண்டில் சுமார் 1 கிலோ 200 கிராம் ஹெரோயின் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் ஐஸ் பயன்பாடு ஐந்து மடங்கு அதாவது, 03 கிலோ 23 கிராமாக அதிகரித்துள்ளது,” என்றும் அவர் கூறினார்.

கண்டியில் மூன்று பயணிகள் பஸ்களில் சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​மூன்று சாரதிகள் மற்றும் இரண்டு நடத்துநர்கள் ஹெரோயின் மற்றும் ஐஸ் பயன்படுத்துகின்றமை கண்டறியப்பட்டது. இது பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

உயர் சமூக பதவிகளில் உள்ள பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருவது மிகவும் ஆபத்தான போக்குகளில் ஒன்றாகும் என்று அவர் எச்சரித்தார்.

சர்வதேச போதைப்பொருள் கடத்தலுக்கான மையமாக இலங்கை அதிகளவில் மாறி வருவதாகவும், சட்ட அமுலாக்கத்தால் மட்டும் இந்த அச்சுறுத்தலை ஒழிக்க முடியாது என்றும் அவர் கூறினார். “இந்த அச்சுறுத்தலை அகற்ற முழு சமூகத்தின் ஆதரவும் அவசியம்” என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கண்டியில் செயல்படும் பல போதைப்பொருள் வலையமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து நடத்தப்படுகின்றன என்றும், ‘நுவர அக்கா’, ‘மாத்தலே அக்கா’ மற்றும் ‘குடு சைமா’ என்று அழைக்கப்படும் நபர்கள் மாவட்டத்திற்குள் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள முக்கிய நபர்களாக பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.