தலைப்புச் செய்திகள்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையை குழப்புவோருக்கு எதிராக, விரைவில் மக்கள் போராட்டம் நடக்கும்: தவம் எச்சரிக்கை

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலயின் சுமூகமான செயற்பாடுகளைக் குழப்புவோருக்கெதிராக, பிராந்திய ரீதியில் – மக்கள் போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினருமான ஏ.எல். தவம் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிருக்கு எதிராகவும் வைத்தியசாலையின் நடவடிக்கைகளை குழப்பும் வகையிலும், அரச வைத்திய – அதிகாரிகள் சங்கத்தினர் கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையிலேயே, இவ்வாறு வைத்தியசாலையைக் குழப்புவோருக்கு எதிராக, மக்களை ஒருங்கிணைத்து போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தவம் தெரிவித்தார்.

”அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கு எதிரான முறைப்பாடுகள் இருக்குமாயின், அதனை நிர்வாக ரீதியாக முறையிட்டு தீர்வைக் காண வேண்டும். அவர் குற்றமிழைத்திருப்பது உறுதியானால், நாங்களும் அவருக்கு எதிராக களத்தில் குதிப்போம்” எனவும் அவர் கூறினார்.

”அதேவேளை, வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஜவாஹிருக்கு எதிராய் – தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வைத்தியசாலையைக் குழப்பிக் கொண்டிருப்பவர்களில் சிலருக்கு பதவிகள் தேவைப்படுகின்றன, சிலர் அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு மீண்டும் வர வேண்டுமென ஆசைப்படுகின்றனர். இவர்களும் இந்த வைத்தியசாலையை எதிர்காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாதளவு மக்கள் போராட்டங்களை நடத்தி மொத்தமாக வெளியேற்றுவோம்“ எனவும் தவம் கூறினார்.

எனவே, வைத்தியசாலையைக் குழப்பும் நடவடிக்கைகளை நிறுத்தி விட்டு, வைத்தியசாலையை சுதந்திரமாக இயங்குவதற்கு – இவ்வாறானவர்கள் வழி விட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.