தலைப்புச் செய்திகள்

உதவி பொலிஸ் அத்தியட்சகர், பெண் பொலிஸ் சார்ஜன்ட் கைது

நுவரெலியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும், கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் பொலிஸ் சார்ஜென்டும் லஞ்சம் பெற்றார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.

லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையக்குழுவின் விசாரணையில் இந்த இருவரும் கைதாகினர்.

வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் ஒரு பொலிஸ் கொன்ஸ்டபிள், மட்டக்களப்பு பிரிவின் பொறுப்பதிகாரியிடம் தனது வீட்டிலிருந்து பணிக்கு வர அனுமதி கோரினார். இந்த ஒப்புதலைப் பெறுவதற்கு தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்கும், வசதி செய்வதற்கும், சந்தேக நபர்கள் பல சந்தர்ப்பங்களில் கையடக்கத் தொலைபேசி மற்றும் ரூ. 72,000 பணம் உட்பட லஞ்சம் கேட்டு பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், நுவரெலியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பணியாற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் இன்று (05) காலை 10.50 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில், அதே விசாரணை தொடர்பாக, கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர், கையடக்கத் தொலைபேசி மற்றும் பிற பொருட்கள் உட்பட பல சந்தர்ப்பங்களில் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில், கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்குள் பிற்பகல் 3.00 மணியளவில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டார்.