தலைப்புச் செய்திகள்

06 அமைச்சர்களுக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழு விசாரணைகளைத் தொடங்கியுள்ளது

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 06 அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து, பணமோசடி சட்டத்தின் கீழ் – லஞ்ச, ஊழல் ஆணைக்குழு விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் சக்தி அமைப்பின் தலைவர் ஜமுனி கமந்த துஷார, ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்த முறைப்பாட்டை அடுத்து, இந்த விசாரணைகள் தொடங்கியுள்ளன.

பணமோசடி சட்டத்தின் கீழ் அமைச்சரவை அந்தஷ்துள்ள 05 அமைச்சர்கள் மற்றும் ஒரு பிரதியமைச்சரின் சொத்துக்கள் குறித்து விசாரணையைத் தொடங்குமாறு, ஆணைக்குழுவை வலியுறுத்தி, செப்டம்பர் 16, 2025 அன்று ஜமுனி கமந்த துஷார – ஆணைக்குழுவில் முறையிட்டார்.

அதன்படி, அமைச்சர்கள் நளிந்த ஜெயதிஸ்ஸ, பிமல் ரத்நாயக்க, வசந்த சமரசிங்க, குமார ஜெயக்கொடி, சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் சுனில் வட்டகல ஆகியோருக்கு எதிராக விசாரணைகளைத் தொடங்க ஆணைக்குழுவின் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவு முடிவு செய்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்தது.

இந்த நிலையில், ஜமுனி கமந்த துஷாரவுக்கு டிசம்பர் 17 திகதியிட்ட பதில் கடிதத்தில், முறைப்பாடு தொடர்பான உண்மைகளை மேலும் தெளிவுபடுத்துவதற்காக, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2023 ஆம் ஆண்டு 9 ஆம் எண் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரிவு 49(1) இன் கீழ், தொடர்புடைய ஆவணங்களுடன் இன்று காலை 9.00 மணிக்கு ஆணையத்தில் ஆஜராகி, அறிக்கையை வழங்குமாறு ஆணையம் கேட்டிருந்தது.

2015 ஆம் ஆண்டு உரக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியபோது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக கூறப்படும் ஊழல் தொடர்பாக, எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு ஆணைகுழுவால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு செப்டம்பரில், அமைச்சர் வசந்த சமரசிங்கவின் சொத்துக்கள் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி – லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தது.