தலைப்புச் செய்திகள்

ரணிலின் உடல்நிலை பற்றி பேசிய டொக்டர் பெல்லன, கடமையிலிருந்து இடைநிறுத்தம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராகப் பணியாற்றி வந்த டொக்டர் ருக்‌ஷன் பெல்லன – பணிகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சு எழுத்து மூலம் இந்த முடிவை நேற்று (18) அறிவிவித்துள்ளது.

அந்தக் கடிதத்தில், ஒரு பொறுப்பான அரச வைத்திய அதிகாரியாக இருந்து கொண்டு, நாட்டில் சர்ச்சைக்குரிய சூழ்நிலையையும் பொதுமக்களிடையே அமைதியின்மையையும் உருவாக்கும் வகையில், அனுமதி இல்லாமல் ஊடகங்களுக்கு டொக்டர் பெல்லன அறிக்கைகளை வெளியிட்டார் என, சுகாதார அமைச்சின் முதற்கட்ட விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக முறையான ஒழுங்கு நடவடிக்கை உரிய நேரத்தில் எடுக்கப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட நிலையில், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, ரணிலின் உடல் நிலை குறித்து, டொக்டர் பெல்லன – ஊடகங்களிடம் தகவல் வெளியிட்டிருந்தார்.