தலைப்புச் செய்திகள்

நாட்டில் 365,951 பேருக்கு வேலையில்லை: நாடாளுமன்றில் தகவல்

இலங்கையில் தற்போது மொத்தம் 365,951 பேர் வேலையில்லாமல் இருகின்றனர் என்று, பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் இன்று (26) தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

2024 தொழிலாளர் கணக்கெடுப்பின்படி, ஆண்டின் முதல் காலாண்டிற்கான வேலையின்மை விகிதம் 2024 இல் 4.5% இலிருந்து 2025 இல் 3.8% ஆகக் குறைந்துள்ளதாகவும் பிரதமர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

மேலும், 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான வேலையின்மை விகிதம், 4.7% ஆக இருந்தது, 2025 இல் 3.8% ஆகக் குறைந்துள்ளது.

கல்வித் தகுதிகளின் அடிப்படையில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை குறித்து அவர் மேலும் விரிவாகக் கூறினார்:

  • க.பொ.த. சாதாரண தரத்திற்குக் கீழே (சா/த): 103,308 நபர்கள்
  • க.பொ.த. சாதாரண தர (சா/த) தேர்ச்சி: 91,405 நபர்கள்
  • க.பொ.த உயர்தர (உ/த) தேர்ச்சி: 128,984 நபர்கள்
  • பட்டம் மற்றும் உயர் கல்வித் தகுதிகள்: 42,254 நபர்கள்

இதேவேளை, 12,000 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு ஏற்கனவே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டார். மீதமுள்ள பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

ஆசிரியர் நியமனங்கள் தொடர்பாக, நீதிமன்ற வழக்குகள் முடிவடைந்துவிட்டதாகவும், மேல்முறையீட்டு நீதிமன்றத்திலிருந்து உத்தியோகபூர்வ அறிவிப்பு வந்தவுடன் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தொடங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.