
இலங்கையில் மனச்சோர்வு (Depression) மிகவும் அதிகமாக உள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மக்கள் தொகையில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு அல்லது 19.4 சதவீதம் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் மனச்சோர்வின் பரவல் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளது என – பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் களனி பல்கலைக்கழகம் நடத்திய கூட்டு ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வின்படி, ஆசிய நாட்டவர்களில் 16.1 சதவீதம் பேர் மட்டுமே மனச் சோர்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2023 ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்கள் குழு – நடத்திய ஆய்வில், 10 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களில் 39 சதவீதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ரோயல் மனநல வைத்திய கல்லூரியால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 2023ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வு; “மனநல ஊழியர்கள் குறைவான அளவில் உள்ளனர் என்றும், சுகாதார நிறுவனங்களில் 34 சதவீதம் மட்டுமே வைத்திய அதிகாரியும், மனநலப் பயிற்சி பெற்ற ஒரு தாதியர்கள் 38 வீதமானோர் மட்டுமே உள்ளனர்” என்று கூறுகிறது.
19 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் அதற்குக் குறைவான இளைஞர்களிடையே மனநல சேவைகளுக்கான ஏற்பாடுகளை – இலங்கை அவசரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
ஏனெனில் இந்த வயதினரில் கணிசமான பகுதியினர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர் (7.0 சதவீதம்) மற்றும் பலர் ஒருவருக்கொருவர் தங்களிடையே வன்முறையை அனுபவிப்பதாகவும் (35.0 சதவீதம்) தெரிவிக்கின்றனர்.


