தலைப்புச் செய்திகள்

முதலீட்டு வலயங்களில் ஏற்றுமதிக்காக மட்டுமே கஞ்சா செய்கை மேற்கொள்ளப்படுகிறது: அமைச்சரவை பேச்சாளர்

கஞ்சா பயிர்செய்கை – முதலீட்டு வலயங்களில் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது என்று அமைச்சரவைப் பேச்சாளர் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த வலயங்களில் பயிரிடப்படும் கஞ்சா, உள்ளூர் சந்தைக்குள் செல்வதற்கான சாத்தியக்கூறு இல்லை என்றும், அவர் கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (04) கலந்து கொண்டு பேசும்போது, அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

ஒருபுறம் கஞ்சா பயிர்செய்கையை அனுமதிக்கும் அதே வேளையில், போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய அரசாங்கத்தின் கொள்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்; கடுமையான பாதுகாப்பின் கீழ் செய்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும், கஞ்சா செய்கையையும் போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தையும் கலக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.

“எங்கள் கொள்கையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. கஞ்சா செய்கை, முதலீட்டு வலயங்களில் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. நாங்கள் தேவையான பாதுகாப்பை வழங்கியுள்ளோம். மேலும் அவை நாட்டிற்குள் வருவதற்கான சாத்தியக்கூறு இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதார பிரதியமைச்சர் அமைச்சர் ஹன்சக விஜேமுனி; உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு நாட்டின் கஞ்சா செய்கைத் திட்டத்தில் பங்கேற்க வாய்ப்பளிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகக் கூறியிருந்தார். ஆனாலும், இதுவரை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது.