தலைப்புச் செய்திகள்

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வேன் என, ஜகத் விதான எம்.பி தெரிவிப்பு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தன்னைத் தொடர்புபடுத்தும் பொய்யான குற்றச்சாட்டுகளை பொலிஸ் மா சி.டி. பிரியந்த வீரசூரிய முன்வைத்தமைக்கு எதிராக, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று – ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் – அவ்வாறு கூறியமை ஆதாரமற்றது என்றும், தன்னை அவமதிக்கும் நோக்கம் கொண்டது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.

“எனக்கு பாதாள உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லை. நான் 1989 முதல் சட்டப்பூர்வமாக வணிகத்தில் ஈடுபட்டுள்ளேன். நான் எந்த சட்டவிரோத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை” என்று அவர் இன்று (27) ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இந்த வார தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் கவனத்தை ஈர்த்த பின்னர், சபாநாயகரின் தலையீட்டின் மூலம் பொலிஸ் பாதுகாப்பைப் தான் பெற்றமையினால், பொலிஸ் மா அதிபர் கோபமடைந்ததாகவும் ஜகத் விதான குற்றம் சாட்டினார்.

தனக்கும் பாதாள உலகக் குழுக்களுக்கும் இடையே பகைமையை உருவாக்க பொலிஸ் மா அதிபர் முயற்சிப்பதாகவும், அதன் மூலம் தனது உயிருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

“இந்த பொறுப்பற்ற மற்றும் தீங்கிழைக்கும் கருத்துக்களுக்கு எதிராக, நான் சட்ட நடவடிக்கை எடுப்பேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய செய்தியாளர்களிடம் கூறுகையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜனத் விதானவுக்கு – அரசியல் ரீதியான அச்சுறுத்தல்கள் இல்லை என்றும், குற்றவியல் வலையமைப்பில் ஈடுபட்டுள்ளவர்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.