
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் அதிபரை அந்தப் பாடசாலையிலிருந்து விலகிச் செல்லுமாறு கோருவதெனவும், அதற்கு அவர் இணங்காமல் விட்டால், அவருக்கு எதிரான முறைப்பாடுகளை கல்வியமைச்சு உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு செல்வதெனவும் அட்டாளைச்சேனை கல்வி அபிவிருத்திக் குழு ஏற்பாடு செய்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளரும் அட்டாளைச்சேனை கல்வி அபிவிருத்திக் குழுவின் செயலாளருமான எச்.பி அனீஸ் தலைமையில், நேற்று (26) இரவு – அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.
அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளத் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல். ஹனீஸ், பிரதேச செயலாளர்கள் எஸ்.எல்.எம். ஹனீபா, ஏ.சி. நசீல், மூத்த சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர், சட்டத்தரணி எம்.எஸ். ஜுனைதீன், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர், பிரதேசத்தைச் சேர்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், தேசிய பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கன் என – பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கடந்த முறை வெளியான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை முடிவுகளின் படி, அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் அனைத்துப் பாடங்களிலும் சித்தியின்மையை (All – W) ஒன்பது மாணவர்கள் பெற்றனர் என்றும், அவர்களில் நான்கு மாணவர்கள் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்கள் எனவும் சுட்டிக்காட்டி, அங்கு பேசிய கல்வி அபிவிருத்திக் குழு செயலாளர் அனீஸ், இந்த நிலைமைக்கு பாடசாலையின் அதிபரே முழுப் பொறுப்பானவர் எனக் குறிப்பிட்டார்.
“அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் கல்வித்தரம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகிறது. அந்தப் பாடசாலையின் பாடசாலையின் அபிவிருத்திக் குழு செயலாளர் எனும் வகையில் நானும், அபிவிருத்திக் குழு உறுப்பினர்களும், பழைய மாணவர் சங்க உறுப்பினர்களம் பல்வேறு தடவை அதனைச் சுட்டிக்காட்டி, கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை முன்மொழிந்து, அவற்றை மேற்கொள்ளுமாறு கோரினோம். ஆனாலும் அது தொடர்பில் அதிபர் எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை” என, எச்.பி. அனீஸ் இதன் போது குற்றஞ்சாட்டினார்.
“பாடசாலை வகுப்பினுள் சீருடையுடன் மாணவர்கள் வீடியோ எடுத்து அவற்றை டிக்டொக்-இல் போட்டுள்ளனர். பாடசாலையின் மதிலால் ஏறி -பாடசாலை நேரத்தின் இடையில் மாணவர்கள் களவாகச் செல்கின்றனர். இவற்றை நிரூபிப்பதற்கான வீடியோ ஆதாரங்களை அதிபரிடம் காட்டியும். அவை தொடர்பிலும் அவர் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை” என்று கூறிய அனீஸ், அந்த வீடியோகளையும் அங்கு ஒளிபரப்பிக் காட்டினார்.
“அதிபர் தொடர்பில் பல்வேறு நிதி மோசடிக் குற்றச்சாட்டுகள் உள்ளன. பாடசாலை விளையாட்டுப் போட்டியொன்றை நடத்தியமைக்காக சுமார் 01 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கணக்குக் காட்டியுள்ளார். அது தொடர்பில் உரிய இடங்களுக்கு அறிவிக்கவுள்ளோம்” எனவும் அவர் கூறினார்.
இது இவ்வாறிருக்க – பாடசாலையினுள் இருந்த பெறுமதி வாய்ந்த ஏராளமான மரங்களை உரிய அனுமதி பெறாமல் – அதிபர் வெட்டியுள்ளார் என்றும், மரங்களை வெட்டுவதற்கான கூலியை வழங்குவதற்காக, பாடசாலை வங்கிக் கணக்கின் காசோலையை அனுமதியின்றிப் பயன்படுத்த முயற்சித்தார் எனவும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட – தேசிய பாடசாலையின் பழைய மாணவரும் ஆசிரியருமான எம்.ஏ.எம். பௌஸ் கூறினார். இவ்விடயங்கள் அக்கரைப்பற்ற வலயக் கல்வி அலுவலகத்துக்கு தெரியப்படுத்தப்பட்டமையை அடுத்து, அங்கிருந்து வந்த அதிகாரிகள், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் வங்கிக் கணக்கு காசோலை உள்ளிட்ட பல ஆவணங்களை கொண்டு சென்றுள்ளனர் எனவும் ஆசிரியர பௌஸ் தெரிவித்தார்.
மேலும், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அதிபர் தொடர்பில் 29 வகையான நிதிக் குற்றச்சாட்டுகள் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.
“எனவே, அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் கல்வித் தரம் மற்றும் ஒழுக்க விடயங்களை மேம்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டங்களை, கடந்த காலங்களில் பல தடவை நடத்தினோம். அந்தக் கூட்டங்களில் நமது ஊரின் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட முக்கிஸ்தர்களும் கலந்து கொண்டனர். அவ்வாறு நடத்தப்பட்ட சில கூட்டங்களில் தேசிய பாடசாலை அதிபரும் கலந்து கொண்டார். அங்கு பாடசாலையின் கல்வி மற்றும் ஒழுக்கத் தரங்களை மேம்படுத்துவதற்கான கால அவகாசமும் அதிபருக்கு வழங்கப்பட்டது. ஆனால், அவை தொடர்பில் அதிபர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என, அங்கு பேசிய அட்டாளைச்சேனை கல்வி அபிவிருத்திக் குழு செயலாளர் அனீஸ் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து, அங்கு வருகை தந்திருந்த பலரும் – இவ்விடயம் தொடர்பில் தங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கூறினர்.
இறுதியில், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையிலிருந்து உடனடியாக இடமாற்றம் பெற்றுச் செல்லுமாறு அந்தப் பாடசாலையின் அதிபரை கோருவது என, அங்கு ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டது. அதற்கு அதிபர் சம்மதிக்காமல் விட்டால், அவர் தொடர்பான குற்றச்சாட்டுகள் அடங்கிய முறைப்பாட்டுக் கடிதங்களை கல்வியமைச்சு உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களுக்கு அனுப்புவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.








