தலைப்புச் செய்திகள்

பணயக் கைதிகள் 07 பேரை முதற் கட்டமாக ஹமாஸ் விடுவித்தது: மேலும் 13 பேர் விடுவிக்கப்படுவர்

ஹமாஸிடம் பணயக் கைதிகளாக இருந்த 07 இஸ்ரேலியர்கள் முதல் கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். காஸாவிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் இஸ்ரேலிய கைதிகளை ஹமாஸ் ஒப்படைத்துள்ளது என, அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட கைதிகள் இஸ்ரேலிய ராணுவத்திடம் கையளிக்கப்பட்டு, வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், அவர்களின் குடும்பங்களுடன் மீண்டும் சேர்க்கப்படுவார்கள்.

இதேவேளை, இஸ்ரேல் சிறைகளில் இருந்து கிட்டத்தட்ட 2,000 பலஸ்தீனியர்கள் விடுதலைக்காக காத்திருக்கும் நிலையில், மேலும் 13 இஸ்ரேல் பணயக் கைதிகளை விடுவிப்பதற்கு ஹமாஸ் தயாராக உள்ளது.

ஹமாஸ் வசமிருந்த பணயக் கைதிகளில் 20 பேர் மட்டுமே உயிருடன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், காஸாவில் போர் முடிந்து விட்டதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மத்திய கிழக்குக்கு விமானத்தில் சென்ற போது அறிவித்துள்ளார்.

காஸாவுக்கு மிகவும் தேவைப்படும் மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து வரத் தொடங்கியுள்ளதால், வடக்கு காஸாவில் உள்ள தங்கள் வீடுகளில் எஞ்சியிருக்கும் இடத்துக்கு பலஸ்தீனியர்கள் திரும்பி வருகின்றனர். ஆனால் உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் மிகவும் பற்றாக்குறையாகவே இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.