
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் முறையாக தனது பதிலை சமர்ப்பித்துள்ளமையை அடுத்து, காஸா மீதான விமானத் தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலை ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.
பலஸ்தீன தொழில்நுட்ப வல்லுநர்களின் அரசாங்கத்திடம் காஸாவின் நிர்வாகத்தை ஒப்படைக்கவும், தம்வசமுள்ள அனைத்து இஸ்ரேலிய கைதிகளையும் விடுவிக்கவும் தயாராக இருப்பதாக இதன் மூலம் ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஆயுதங்களைக் கைவிட வேண்டும் எனும் நிபந்தனைக்கு ஹமாஸ் பதிலளிக்கவில்லை. அதற்கு பதிலாக, நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க மத்தியஸ்தர்கள் மூலம் ‘உடனடியாக அமைதிப் பேச்சுவார்த்தைகளில் நுழைய’ தயாராக இருப்பதாக ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.
ஹமாஸின் பதிலை வரவேற்று ட்ரம்ப் ஒரு வீடியோ உரையை நிகழ்த்தியுள்ளார். அதில், இது போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் எப்போதுமில்லாத ஒரு நடவடிக்கை என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
“இதை ஒன்றிணைக்க எனக்கு உதவிய நாடுகளான கத்தார், துருக்கி, சவுதி அரேபியா, எகிப்து, ஜோர்டான் மற்றும் பல நாடுகளுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்றும் அவர் தேரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய பணயக்கைதிகள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்வதன் அவசரத்தை டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். “மிக முக்கியமாக, பணயக்கைதிகள் தங்கள் பெற்றோரிடம் திரும்பி வருவதை நான் எதிர்பார்க்கிறேன்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்கான டிரம்பின் திட்டத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்த இஸ்ரேல் தயாராக இருப்பதாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் கூறியுள்ளது.
இருப்பினும், காஸாவில் குண்டு வீசுவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டுமேன டிரம்ப் அழைப்பு விடுத்தமை குறித்து – இஸ்ரேல் பதிலளிக்கவில்லை.


